மைசூர் தொல்லியல் அலுவலகத்தில் உள்ள படியெடுத்த கல்வெட்டுகளை, தமிழகத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளோம் என தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மைசூரிலுள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாப்பதற்கு பதிலாக, தமிழகத்திலேயே பாதுகாக்கலாமே? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியாவில் இதுவரை கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மைசூரில் உள்ள தொல்லியல் அலுவலகத்தில் உள்ளன. இவற்றை ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அங்குள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இன்னும் படிக்கப்படாமல் (அறியப்படாமல்) உள்ளன. அவற்றை ஆராய்வதன் மூலம் பழங்காலத் தமிழர்களின் அறியப்படாத சரித்திரத்தை அறிந்து கொள்ள முடியும் எனும் நோக்கில், பொதுநல ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அங்குள்ள கல்வெட்டு பிரதிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.