ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என்றுநம்புவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல் துறையினருக்கு அன்றாடப் பணிகளில் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு தினமும்ரூ.560 ஊதியம் என்ற அடிப்படையில், மாதத்தில் 5 நாட்கள் மட்டும் பணி நாட்களாக நிர்ணயித்து 2007-ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர், ஊர்க்காவல் படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து 2019-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும், 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு ரூ.280-ம்,4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே ரூ.560-ம் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து, ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அதிகரித்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது.

புதுச்சேரி, ஆந்திரா போல..

அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘ஊர்க்காவல் படையினருக்கு மாதம்தோறும் ரூ.5,600 மட்டுமேஊதியம் கிடைக்கிறது. தமிழகத்தில் பணியில் உள்ள 17,600 ஊர்க்காவல் படையினரில் 76 சதவீதம்பேர் பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

புதுச்சேரி, ஆந்திராவில் உள்ளதுபோல, தமிழகத்திலும் ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்களையோ, ஊதியத்தையோ உயர்த்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், ‘‘10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணிநாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்பட்டு வரு கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஊர்க்காவல் படையினரை பணி வரன்முறைப்படுத்த முடியாது எனவும், தாமாக முன்வந்து சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையிலேயே ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

வேலைவாய்ப்பு இல்லாத பலர்ஊர்க்காவல் படையில் சேர்ந்து, வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தசூழல் மாற வேண்டும். 10 நாட்கள்பணி வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறினாலும், ஊர்க்காவல் படையினர் சட்டவிரோதமாக மாதம்முழுவதும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். யாருக்கும் சாதகமோ, பாதகமோ ஏற்படாமல், ஊர்க்காவல் படையினருக்கான தேர்வுமற்றும் பணியை வரன்முறைப்படுத்த உரிய விதிகளை வகுக்கவேண்டும். ஊர்க்காவல் படையில்பணியாற்றும் அனைவருக்கும்குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என்று நம்புவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை முடித்து வைத்தது.