காங்கிரஸ் மீது பாஜக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பரப்புரையை வேகமாக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தினம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, `காங்கிரஸ் கொள்கை முழக்கம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றன. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று நூலை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஓர் இயக்கத்தின் வெற்றி என்பது தொடர்ந்து பரப்புரை செய்வதுதான். நாடு, சுதந்திர போராட்டத்தை கண்டது. பல ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். சுதந்திரம் கிடைக்கும் என்றோ, அதன்பிறகு அரசு வருமோ என்றெல்லாம் அவர்களுக்கு தெரியுமா?. ஆந்த உணர்ச்சியின் அடிப்படைதான் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி. காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி வரலாறு உள்ளது. இதை அழிந்து விடலாம் என்று பாஜக தனது சித்தாந்தத்தை பரப்பி வருகிறது. பாஜக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, மகாத்மா காந்திக்கு எதிராக கருத்தோட்டத்தைக் கூறி வருகிறது. மதம் என்பது நாம் விரும்பும் காரணத்தால், அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். காங்கிரஸ் கட்சி எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.

மதசார்பற்ற கொள்கை என்பது வேறொரு மதத்தை வெறுக்க கூடாது என்பது தான். காந்தியை விட இந்து மதத்தை நேசித்தவர்களோ, கடவுள் மீது நம்பிக்கை உடையவர்களோ இருந்தார்களா?. காங்கிரஸ் கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அனைவரும் ஏற்றுக் கொண்ட தலைவராக காந்தி இருந்தார்.

காங்கிரஸ் மீது பாஜக அவதூறுகளைப் பரப்பி வருகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பரப்புரையை வேகமாக்க வேண்டும். அதிகாரம் தானாக கைக்கு வராது. இயக்கமே கடுமையாக உழைத்தால்தான் அதிகாரத்துக்கு வர முடியும். தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால்தான் நாம் வெற்றி பெற்றோம். கொள்கை சார்ந்த அரசியல்தான் இந்த வெற்றிக்கு காரணம். இதை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும்’’என்றார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, ‘‘இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததை விட, தற்போது நிலைமை மோசமாக இருக்கிறது. மதம் வேண்டாமென கூறிய நேதாஜியையும், ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென கூறிய டாக்டர் அம்பேத்கரை பற்றி பேச பாஜகவுக்கு என்ன உரிமை இருக்கிறது. பாஜக போலி நாடகங்களை நடத்தி வருகிறது. அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலம் இது. வரும் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.