தருமபுரி பாமக-வின் கோட்டை என்பதை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நிரூபிக்க ஆதரவு தாருங்கள் என்று தருமபுரியில் அன்புமணி பேசினார்.

தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள் என மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரி குமாரசாமிபேட்டையில் நேற்று முன் தினம் இரவு நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாமக சார்பில் தனித்துப் போட்டியிடுவோம் என பாமக நிறுவனர் எடுத்த முடிவு சிறப்பான முடிவு. பாமக வேட்பாளர்கள் ஏழைகள், நேர்மையானவர்கள். பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் உங்களைத் தேடி அவர்கள் வருவார்கள். மற்ற கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களைத் தேடிச்சென்று காத்திருந்து தான் நீங்கள் பார்க்க முடியும்.

இதர மாவட்டங்களில் கிராம மக்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஓரளவு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், தருமபுரி மாவட்ட தலைநகரம் வேலை வாய்ப்பு வழங்கும் அளவு போதிய வளர்ச்சியை எட்டவில்லை. எனவேதான், இங்குள்ள மக்கள் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் வரை வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் இவ்வாறு வெளியில் உள்ளனர்.

வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி பட்டியலில் தமிழகத்திலேயே கடைசி இடத்தில் தருமபுரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்ட தலைநகரமும், மாவட்ட கிராமங்களும் வளர்ச்சி காண வேண்டும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் முன்பு தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக தருமபுரியை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். நீண்ட நாள் கோரிக்கை நிலையிலேயே உள்ள சிப்காட் தொழில் பேட்டை வளாகம் விரைந்து அமைக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதையெல்லாம் நிறைவேற்ற பாமக ஆட்சி அதிகாரம் பெற வேண்டும். அதற்கான அடித்தளமாக உள்ளாட்சி அமைப்புகளில் நம் வலிமையை நிரூபிக்க வேண்டும். தருமபுரி பாமக-வின் கோட்டை என்பதை இந்த தேர்தலிலும் நிரூபிக்க ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, முன்னாள் எம்.பி பாரிமோகன், நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, அரசாங்கம், செல்வம், முருகசாமி, சண்முகம், பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.