அரபிக் கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “தென் தமிழக மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை பிப் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென் காசி, நெல்லை, குமரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் நாளை மறுநாள் பிப் 23-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பணிமூட்டம் காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.