தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் மென்பொருட்களைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (22.10.2021) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சுமார் ஒரு லட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இத்திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்காக “இ-முன்னேற்றம்” என்ற வலைத்தளம் (https://emunnetram.tn.gov.in/) தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களான பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட நாள், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளர்ச்சி, நிதிநிலைமையின் வரையறை, பணிவளர்ச்சியின் தொடர் புகைப்படம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும், முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை இதன் வழியே கண்காணித்திடவும் இயலும். துறைத்தலைமை அலுவலகங்கள் அவ்வப்போது திட்டங்களின் வளர்ச்சியினைத் தெரிவிப்பதற்கும், நெருக்கடியான பொருண்மைகள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் தெரிவிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் ஏற்றுமதி ஆண்டுதோறும் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள “தகவல் தொழில்நுட்ப நண்பன்” என்ற வலைத்தளம், தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துக்கேட்புத் தளமாக விளங்குவதுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் நேரடியாக இதில் இணைந்து கொள்கைகளை உருவாக்கிடவும் அவர்களின் பங்களிப்பினை நல்கிடவும் உதவும்.

இத்தளத்தின் வாயிலாக உள்நுழையும் குழுமங்கள், தகவல் தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்படும் அனைத்து கொள்கைகள், அரசாணைகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளை எளிதில் பார்வையிட இயலும். மேலும், எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய கொள்கைகள் குறித்து தமது கருத்துரைகளைப் பதிவிடும் வசதியும், அதற்குத்தக்க தீர்வுகளைப் பெற்றிடவும், தகவல்களை மின்னஞ்சல் வழியாகப் பெற்றிடவும் உதவும்.

இதன்மூலம் குழுமங்களின் கொள்கைகள், திட்டங்களின் வரைமுறைகள் மற்றும் மிக வேகமான வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள் போன்றவற்றைக் கண்காணிக்க முடியும். மேலும், இது எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் உள்ளதால் வர்த்தகத்தைப் பெருக்கப் பெரிதும் துணைபுரியும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “கணினி விசைப்பலகை” மற்றும் “தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தி, “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி- தமிழிணைய ஒருங்குறி மாற்றி” (Keezhadi – Keyboard and Tamizhi –Unicode Converter) எனப் பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

கீழடி- விசைப்பலகை மென்பொருளானது, தமிழ்’99 விசைப்பலகை (Tamil’99 Keyboard), ஒலிபெயர்ப்பு விசைப்பலகை (Phonetic Keyboard), பழைய தட்டச்சு விசைப்பலகை (Old Typewriter Keyboard) ஆகிய மூன்று விதமான கணினி விசைப்பலகைகளின் அமைப்பில் செயல்படும்.

தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென்பொருளானது, வானவில் மற்றும் பிற தமிழ் எழுத்துருக்களில் (Fonts) தட்டச்சு செய்யப்பட்ட .doc, .docx, .rtf, .xls, .xlsx, .ods, .ppt, .pptx போன்ற அமைப்புகளில் உள்ள உரைநடை (Text), கோப்பு (File) மற்றும் கோப்புறை (Folder) ஆவணங்களை “தமிழ் ஒருங்குறி”க்கு மாற்றும் தன்மையுடையது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருட்களைக் கட்டணமின்றி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து (www.tamilvu.org/unicode) பதிவிறக்கம் செய்திட இயலும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.