கரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா மையங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

கோடைகாலம் தொடங்கிய போதும் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. தற்போது மே மாதம் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்ற போதும் கடந்த ஒரு வாரத்தில் கன்னியாகுமரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். கடந்த இரு ஆண்டுகளை விட இம்முறை அதிகம் பேர் வந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித் தனர்.

ரம்ஜான் பண்டிகை விடுமுறை மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

இதனால் கன்னியாகுமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. திரிவேணி சங்கமத்தில் அதிகாலையிலேயே சூரிய உதயம் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையின் பின்னணியில் சூரியன் உதிக்கும் காட்சியை குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சூரிய அஸ்தமன காட்சியையும் பார்வையிட ஏராளமானோர் குவிந்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு இல்லத்தில் காலையில் இருந்தே வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சென்ற னர்.

விவேகானந்தா கேந்திரா, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சூழலியல் பூங்கா, அருங் காட்சியகம், ராமாயண கண்காட்சி கூடம் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இதுபோல் வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்திலும் நேற்று கூட்டம் அலைமோதியது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். இந்நாட்களில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் 60 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறைக்கு பின்னர் கன்னியாகுமரியில் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணி கள் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாத் துறையினர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.