உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைகாட்சியில் லுகாஸ்ஷென்கோ கூறும்போது, ”உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. உக்ரைன் ஆதரவு நிலைப்பாடுதான் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகிறது. ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளையும் நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

இது குறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, லுகாஸ்ஷென்கோவின் கருத்துகளை ரஷ்யா கவனித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்றும் புதின் கூறியிருந்தார்.

உக்ரைன் போரின் பின்னணி: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.