இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 208 ரன்கள் விளாசித் தள்ளினார். இது உண்மையில் ஒரு கிளாசிக் இன்னிங்ஸ் வகையாகும். இஷான் கிஷன் அடித்தது காட்டடி தர்பார் என்றால், இது கிளாஸ் ரகத்தைச் சேர்ந்தது.

ஆனால், சுப்மன் கில்லின் தந்தை சுப்மன் கில் இதை முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும், இரட்டைச் சதத்தை இலங்கைக்கு எதிராகவே அடித்திருக்க வேண்டும் என்றும் அதிருப்தியுடன் கூறியதாக பஞ்சாப் வீரரும், குஜராத் டைட்டன்ஸ் வீரருமான குர்கீரத் மான் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோருக்கு அடுத்த படியாக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய 5வது வீரர் ஆனார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராகவும் 3-0 என்று ஒயிட் வாஷ் கொடுத்த போது சுப்மன் கில் சதமெடுத்தார். ஆனால், இலங்கைக்கு எதிரான போட்டியிலேயே சுப்மன் கில்லுக்கு இரட்டைச் சதம் எடுக்க கால அவகாசம் இருந்ததாகவும் ஆனால் எடுக்கவில்லை என்றும் சுப்மன் கில்லின் தந்தை அதிருப்தி தெரிவித்ததாக குர்கீரத் மான் கூறுகிறார்.

குர்கீரத் மான், சுப்மன் கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சுப்மன் கில் தந்தையுடன் உரையாடினார். அப்போது சுப்மன் கில் தந்தை, குர்கீரத் மானிடம், “பாருங்கள் எப்படி அவுட் ஆகிப் போகிறான் என்று. சதம் எடுத்த பிறகும் இரட்டைச் சதம் எடுக்க ஏகப்பட்ட கால அவகாசம் உள்ளது. எப்போதும் இது போன்ற தொடக்கங்கள், ஆட்டங்கள் அமையாது, அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுதான் சுப்மன் திருந்துவானோ, கற்றுக் கொள்வானோ” என்று அதிருப்தியுடன் கூறியுள்ளார்.

சுப்மன் கில்லின் தந்தை லக்வீந்தர் கிரிக்கெட்டின் ஆகப்பெரிய ரசிகர். முதன் முதலாக பிரிஸ்பனில் 91 ரன்களை தன் மகன் சுப்மன் எடுத்து ஆட்டமிழந்த போது சதம் எடுக்காமல் அவுட் ஆனதற்காக கடிந்து கொண்டதும் நடந்தது.சுப்மன் தந்தை லக்வீந்தர் பற்றி குர்கீரத் மான் கூறும்போது, “லக்வீந்தருக்கு தன் மகன் சுப்மன் கில் மீது நிறைய எதிர்பார்ப்புகள். எங்கள் அனைவருக்குமே சுப்மன் கில் மீது சிறுபிராயம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகம். கடைசியாக ஒரு சதத்தை இரட்டைச் சதமாக சுப்மன் கில் மாற்றியது நிச்சயம் தந்தை லக்வீந்தரை திருப்தி அடையச் செய்திருக்கும்.

சுப்மன் கில் 40 ரன்கள் 50 ரன்களை சீரான முறையில் எடுக்கிறார். சதம் அவருக்கு கைகூடவில்லை. பார்ம் ஒரு பிரச்சனையில்லை. ஏனெனில் ஒருவர் பார்மில் இல்லை என்றால் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டுவதே கடினம். அவர் நன்றாகத் தொடங்குகிறார், செட்டில் ஆகிறார், ஆனால் பாதியில் அவுட் ஆகி விடுகிறார். அவரைப்போன்ற திறமைசாலிகளுக்கு எப்போதும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். பெரிய ஸ்கோர்களை அவர் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுப்மன் கில் குறித்து அனைவருக்குமே இருக்கும்” என்று குர்கீரத் சிங் மான் தெரிவித்துள்ளார்.

ஆம்! சுப்மன் கில் ஆடினால் பார்த்துக் கொண்டே இருக்கலாம், மிகவும் ஸ்டைலிஷ் ஆன வீரர் என்பதால் சுப்மன் கில் விரைவில் ஆட்டமிழந்தால் ஆட்டம் களையிழந்து பலருக்கும் சோர்வை ஏற்படுத்துவதென்னவோ உண்மைதான். இந்நிலையில்தான் நேற்றைய இன்னிங்ஸ் ஸ்ட்ரைக் ரேட் மட்டத்தில் பெரியது என்றாலும் ஆட்டம் அதற்காக மரபை மீறியதாக இல்லை. கிளாசிக் ஸ்ட்ரோக்குகளுடன் பெரிய சதங்களை அடிக்க முடியும் அதுவும் ஒருநாள் போட்டிகளில் கூட என்பதை சுப்மன் கில் நிரூபித்துள்ளார்.