பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளநிலையில் புதிய முதல்வர் இன்று மதியம் தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

எனினும், முதல்வர் அமரீந்தரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் ஏற்படும் கிளர்ச்சி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அமரீந்தர் சிங் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படும் சுனில் ஜாக்கர் முதல்வராக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.