மருத்துவத் துறை இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குநர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குநர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ சேவைகள் இயக்குநர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர், இ.எஸ்.ஐ இயக்குநர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக் கொள்கின்றனர்.
மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ சேவைகள் இயக்குநர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை. இதனால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எடுத்துக்காட்டாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்), மருத்துவக் கல்வி இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் முதன்மையர் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்?
இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குநர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.