சேலம் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நங்கவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர்பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக கவுன்சிலர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தனித்தனியாக 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி,‘‘இந்த 4 பேரூராட்சிகளிலும் அதிமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதால், வேண்டுமென்றே அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக மறைமுகத் தேர்தலை தள்ளிவைத்துள்ளனர்’’ என வாதிட்டனர்.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘சட்டம் – ஒழுங்கு பிரச்சினை மற்றும் தேர்தல் அதிகாரிகளின் உடல்நலக்குறைவு காரணமாக சிலஇடங்களில் மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாயமாகி விட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள்,‘‘சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளில் மறைமுகத் தேர்தல்ஏன் தள்ளிவைக்கப்பட்டது? எந்த தேதியில் இந்த தேர்தல் மீண்டும் நடத்தப்படும் என மாநிலதேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சிசிடிவி கண்காணிப்பு,கேமரா, வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய நேரிடும்’’ என எச்சரித்து விசாரணையை வரும்14-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.