புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே நாளில் இரு இடங்களில் பணியாற்றும் சூழலில் பால்பவன் ஆசிரியர்கள் இருக்கும் நிலையும் நீடிக்கிறது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தாவரவியல் பூங்காவையொட்டி ஜவகர் பால்பவன் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு முதல், பள்ளி செல்லும் 6 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கலைகளை கட்டணமின்றி கற்பித்து வருகின்றனர்.

ஜவகர் சிறுவர் இல்ல தலைமையகமாக இந்த இடம் உள்ளது. இதன் கிளைகள் லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், கதிர்காமம், வில்லியனூர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் இயங்கி வருகிறது. பால்பவனில் நடனம் (பரதம், கிராமியம்), வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், யோகா, கையெழுத்து பயிற்சி, கேரம், செஸ், இறகு பந்து, டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ ஆகியவற்றில் இலவசமாக பயிற்சி அளிக்கின்றனர்.

இங்கு கலைகளை கற்கும் பல சிறுவர்களின் பெற்றோர் ஏழ்மையான நிலையிலே உள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் தரப்பில் கூறுகையில், ” பால்பவனில் இலவசமாக கலைகளை கற்று தருவதால்தான் எங்கள் குழந்தைகளால் கலைகளை கற்க முடிகிறது. பள்ளி முடித்த பிறகு இங்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் இங்கு அதற்கான பாடத்திட்டமோ, தேர்வோ, சான்றிதழோ தரப்படுவதில்லை. குழந்தைகளை ஊக்கப்படுத்தவும், திறன்களை மேம்படுத்தவும் பாடத்திட்டத்தை வகுத்து ஆண்டுதோறும் சான்றிதழ் தருவது அவசியம்” என்றனர். இது குறித்து பயிற்றுநர்கள் தரப்பில் பேசியபோது, “காலையில் பள்ளியிலும், மாலையில் பால்பவனிலும் பணியாற்றுகிறோம்.

ஆசிரியர்களுக்கான ஊதியம் எங்களுக்கு தரப்படுவதில்லை. சென்னை உயர்நீதிமன்றம் ஊதியமுரண்பாட்டை சரி செய்ய பரிந்துரைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லி பால்பவனில் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இசைஆசிரியர்கள் யாரும் அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படவில்லை.

பல பணி இடங்கள்\காலியாக உள்ளன. அந்த இடங்களை பால்பவன் ஆசிரியர்கள் கொண்டு நிரப்பலாம். கலைகள் கற்பதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்த முடியும். அவர்களின் மன இறுக்கத்தையும் போக்க முடியும். குழந்தைகளின் திறனும் மேம்படும். புதிய கல்விக்கொள்கை புதுச்சேரியில் அமலாக உள்ளது.

அதில் தொழில்முறை கல்வியும் உண்டு. அனுபவம் வாய்ந்த பால்பவன் ஆசிரியர்களை இசை, நடனம், ஓவியம், உடற்கல்வி, தையல், நூலக ஆசிரியர்களாக பள்ளிகளில் பதவி உயர்வு அளிக்கலாம். இதன் மூலம் புதிய இளம் தலைமுறையினரை பால்பவனில் நியமிக்கலாம்” என்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், ” பாரதியார் பல்கலைக்கூடத்தில் படித்து பலரும் பணிவாய்ப்பின்றி உள்ளோம். கலைகளை இலவசமாக கற்று தரும் பால்பவனை தொகுதி தோறும் அரசு பள்ளிகளில் அமைக்க வேண்டும்.

அவைகளில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் படித்த எங்களை போன்றோரை பயிற்றுநராக நியமித்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். ஏழை குழந்தைகளின் கலை திறனை மேம்படுத்த வாய்ப்பாக அமையும். வரும் கல்வியாண்டிலாவது இவைகளை தொடங்க அரசு முடிவு எடுத்தால் குழந்தைகளின் வாழ்க்கையுடன் எங்கள் வாழ்க்கையும் மேம்படும்” என்றனர்.