பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள 5-வது இரட்டை சதம் ஆகும். அதோடு நியூஸிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை இரட்டை சதம் பதிவு செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சவுதி தலைமையிலான நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்தத் தொடரின் முதல் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 438 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 612 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 174 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நியூஸிலாந்து தரப்பில் லேதம் 113 ரன்கள் எடுத்தார். கான்வே 92 ரன்கள் எடுத்தார்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் Fab 4-களில் ஒருவரான வில்லியம்சன், 395 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்களை குவித்தார். இதில் 21 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும். தனது அபார ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தானை துவம்சம் செய்துள்ளார் வில்லியம்சன். அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகி இருந்தார்.