பெண்கள், இளைஞர்கள் தங்கள் முன்பு இருக்கும் அனைத்து தடைகளை உடைத்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
அபுதாபியில் நடப்பாண்டு நடைபெற்ற கலப்பு தற்காப்பு கலையில் இந்தியாவில் முதல் பெண்மணியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை விருதி குமாரி வெண்கல பதக்கம் வென்றார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் அரங்கில் நோபல் ஹார்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் வீராங்கனை விருதி குமாரியை பாராட்டும் விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது: தற்போதைய சூழலில் கரோனா, பொருளாதார சூழல், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலருடைய மனநிலையில் எதிர்காலம் கேள்விகுறியாகத்தான் உள்ளது. வீராங்கனை விருதி குமாரி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பெண்கள் சமுதாயத்தில் பல்வேறு தடைகளை சந்தித்து வருகின்றனர். பெண்கள், இளைஞர்கள் தங்கள் முன்பு இருக்கும் அனைத்து தடைகளை உடைத்து வாழ்வில் சாதிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உலகத்தையே மாற்றும் திறன் உள்ளது. தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வீராங்கனை விருதி குமாரி பேசியதாவது: நான் பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்க மாட்டேன். இதனால், ஒவ்வொரு பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பிலும் என்னுடைய பெற்றோர் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது யாராவது என்னை ஏதாவது செய்து விடுவார்களா என்ற பயம் இருந்தது. அதில், இருந்து மீள்வதற்காகவே இந்த போட்டியை கற்று கொண்டேன். இந்த போட்டியில் முதல் வெற்றியை பெற்ற பின்புதான் வெற்றி என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன். என்னுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் உட்பட பல பெண்கள் தங்களுடைய கனவுகளை தொலைத்துள்ளனர். பெண்களுக்கான வழியை உருவாக்க தொடர்ந்து செயல்படுவேன். இந்த வெற்றி என்னுடைய கனவில் ஒரு சதவீதம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.