வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால், தான் ஆச்சரியப்பட மாட்டேன் என அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாத இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, முகம்மது நபி குறித்து விமர்சித்துப் பேசினார். இது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தப் பின்னணியில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அசாதுதின் ஒவைசி இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ”நுபுர் ஷர்மா நிச்சயம் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுவார். பாஜக நிச்சயம் அவரை பயன்படுத்திக்கொள்ளும். வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது டெல்லியில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால் அதில் ஆச்சரியம் எதுவும் இருக்காது. ஏனெனில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு பாஜகவில் வலிமையான ஆதரவு இருக்கிறது. தனது பேச்சுக்கு நுபுர் ஷர்மா முறையான மன்னிப்பு கோரவில்லை. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என அமித் ஷா கூறி இருப்பதாக நுபுர் ஷர்மா கூறும் வீடியோதான் வெளியானது. நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு மத்திய அரசு உடனடியாக எதிர்வினையாற்றவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் போட்டியை பாஜகவுக்கு அளிக்க வேண்டும். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் பாஜகவை தோற்கடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகத்தான் அமையும்.

நரேந்திர மோடியா, அர்விந்த் கெஜ்ரிவாலா, ராகுல் காந்தியா என்ற கேள்வி உருவானால் நரேந்திர மோடிதான் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை தாங்க கெஜ்ரிவால், ராகுல் காந்தி, சந்திர சேகர ராவ், மம்தா பானர்ஜி என பலருக்கும் விருப்பம் இருக்கிறது. இவர்கள் யாரும் தனித்தனியாக போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகத்தான் அமையும்.” என அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார்.