மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாகூ அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய அன்னிய நேரடி முதலீடு கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளதால், கிரிக்கெட், பொழுதுபோக்கு, செய்தி உள்ளிட்ட கன்டென்ட் சேவைகளை இன்று முதல் Yahoo நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பிரபல வலைதள நிறுவனமான Yahoo -வை 2017 ஆம் ஆண்டு வெரிசோன் என்ற அமெரிக்கன் டெக்னாலஜி நிறுவனம் வாங்கியது. அதன்பின் தொடர்ந்து கிரிக்கெட், பொழுதுபோக்கு, செய்தி ஆகிய சேவைகளை இந்தியாவிலும் கொடுத்து வந்தது. தற்போது, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், அந்த நிறுவனத்தின் சேவைகளை இந்தியாவில் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், யாகூ பைனான்ஸ், மேக்கர்ஸ் இந்தியா, கிரிக்கெட், செய்திகள் உள்ளிட்ட கன்டென்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் இன்று முதல் Yahoo நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதனால் இந்திய யூசர்கள் யாகூ நிறுவனத்தின் இந்த சேவைகளை வரும் காலங்களில் பெற முடியாது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள யாகூ நிறுவனம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மீடியாக்களுக்கு கொண்டு வந்துள்ள அந்திய நேரடி முதலீட்டு கொள்கை, தங்களைப் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால், டிஜிட்டல் கன்டென்ட் மீடியாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இன்று முதல் யாகூ கிரிக்கெட், என்டர்டெயின்மென்ட், பைனான்ஸ் உள்ளிட்ட சேவைகளை கிடைக்காது எனக் கூறியுள்ளது.

அக்டோபர் 15, 2021 ஆம் தேதி முதல் இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு டிஜிட்டல் ஊடகங்கள் மத்திய அரசின் 26% அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைக்கு இணங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 26 விழுக்காட்டுக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்த அனுமதியைப் பெற்ற நிறுவனங்கள் அடுத்த ஓராண்டுக்குள் தங்களின் வெளிநாட்டு பங்குகளை 26 விழுக்காட்டுகுள் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாகூ அறிவித்துள்ளது. இந்தப் புதிய சட்டம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்தியாவின் ஒழுங்குமுறை சட்டங்களால் யாகூ பாதிக்கப்படுவதால், வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில், யாகூ மெயில் இந்தியாவில் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கை யாகூ மெயிலைக் கட்டுப்படுத்தாது என்பதால், யாகூ மெயில் யூசர்கள் கவலைப்படத் தேவையில்லை என விளக்கம் யாகூ இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.