அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோன்று மஞ்சப் பையை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என உயர் நீதிமன்ற கிளை நீதிபதி மகாதேவன் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை இல்லா வளாகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற கிளையில் தானியங்கி மஞ்சள் பை விநியோகிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய நீதிபதி: “தமிழகத்தில் மீண்டும் மஞ்சப் பைத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மஞ்சள் பைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துகிறது.

மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும் என்பது பழமொழி. அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோன்று மஞ்சப் பையை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும் மஞ்சள் பை உதவும். இதனால் மஞ்சள் பைத் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி மகாதேவன் கூறினார்.

இந்நிகழ்வில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பவானி சுப்பராயன், ஆர்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், ஜெ.சத்ய நாராயண பிரசாத், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்பிரியா சாகு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், வீராகதிரவன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.