நாகை கோயில் திருவிழாவில் நிலைதடுமாறி விழுந்தவர் மீது சப்பரம் ஏறி உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று (30.4.2022) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார்,

அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.