Site icon Metro People

காதலை ஏற்க மறுத்த 17 வயது பார்வை மாற்றுத் திறனாளி சிறுமியை படுகொலை செய்த இளைஞர்: ஆந்திராவில் கொடூரம்

காதலை ஏற்க மறுத்த 17 வயது பார்வை மாற்றுத் திறனாளி சிறுமியை இளைஞர் ஒருவர் கொலை செய்த கொடூரம் ஆந்திராவில் நடந்துள்ளது.

காதலைக் கொண்டாட ஒரு தினம். பிப்ரவரி 14 நாளை அந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர், காதலை ஏற்க மறுத்த சிறுமியை படுகொலை செய்த இளைஞர் போன்ற செய்திகள் அந்த தினத்தின் அர்த்தத்தை சிதைப்பது போல் அமைந்துள்ளன.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கிருஷ்ணா நதிக் கரையில் உள்ளது என்டிஆர் கட்டா எனும் பகுதி. இது டடேப்பள்ளி காவல் சரகத்துக்கு உட்பட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அந்தச் சிறுமியின் வீட்டிற்கே சென்று இந்தப் படுகொலையை அந்த இளைஞர் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், “கொலையாளி ஒரு கஞ்சா அடிமை. நேற்று வீட்டில் யாருமில்லாதபோது வீட்டினுள் நுழைந்து அச்சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். பெண் கூச்சிலடவே அங்கிருந்து தப்பியோடினார். இதனால், பழி தீர்க்க இன்று அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்” என்றனர்.

இந்தச் சம்பவம் முதல்வர் வீட்டின் அருகே உள்ள பகுதியில் நடந்துள்ளது. கஞ்சா, மது போன்ற போதைப்பொருட்கள் தங்கள் பகுதியில் தாராளமாக புழங்குவதாக ஊர் மக்கள் போலீஸில் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே போதை இளைஞரால் ஒரு சிறுமியின் உயிர் பறிபோனது என்று உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் 2021ல் கிருஷ்ணா நதி படுகையின் அருகே உள்ள சீதாநகரம் கிராமத்தில் ஓர் இளம் பெண் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா நதி பகுதிகளில் கஞ்சா தடுப்பு நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியது. ஆனால், தற்போது மீண்டும் அப்பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனையும், பயன்பாடும் களைகட்டியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

Exit mobile version