திருவொற்றியூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த இளைஞர் தனியரசை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின் இன்று (28.12.2021) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக, தக்க தருணத்தில் குடியிருப்பு வாசிகளை எச்சரிக்கை செய்து, அனைவரையும் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசு என்பவரை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.

திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு நேற்று (27.12.2021) இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. “D” பிளாக் குடியிருப்புக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்து இதுகுறித்து உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த தனியரசு என்பவர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். மேலும், அக்கட்டிடத்தில் விரிசல் அதிகமாவதைக் கண்டறிந்து, மக்களை உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேறிட எச்சரிக்கை செய்ததால் இவ்விபத்தில் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

இதனிடையே, தனியரசு – முதல்வர் சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி. சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here