ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஸி, தற்போதைய சிஇஓ எலான் மஸ்குக்கு எதிராக மறைமுக தொனியில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுதவிர ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்று கொள்ளும் முறையை அறிவித்தார். அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் போலி செய்திகள் எளிமையாக பரவும் என்ற குரல்களும் எழுந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்த குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு ட்விட்டரில் எலான் செய்து வரும் மாற்றங்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினர். அந்த நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக், எலான் மஸ்க்கை விமர்சித்து , “யாருக்கும் எதுவும் தெரியாது” என்று மறைமுகமாக பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க் ” மந்திரத்திற்கு… எல்லாம் தெரியும்” என்று பதிலளித்துள்ளார்.