Site icon Metro People

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லையா? மத்திய இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நடவடிக்கை

நாட்டில் கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தபோது, “கரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2-வது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனாலும், ஆக்சிஜன் சப்ளையைச் சீராக மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து வழங்கியது. சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தமைக்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “மத்திய அரசு மாநிலங்களவையில் நேற்று அளித்த பதிலில், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் எத்தனை நோயாளிகள் உயிரிழந்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம், கேள்விப்பட்டோம். ஆனால், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தவறான தகவலை அளித்து அவையைத் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். ஆதலால், அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவருவோம்.

அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். கரோனா 2-வது அலையை இப்படித்தான் மத்திய அரசு எதிர்கொண்டது. இப்படித்தான் கட்டுப்படுத்திவருகிறது என்பது தெரிகிறது. இன்று பிரதமர் மோடி அவையில் பேச இருப்பதால், இதுதான் அரசின் தெளிவான பதிலாக இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

Exit mobile version