Site icon Metro People

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப். 2-ல் டெல்லி பயணம்; கட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறந்துவைக்கிறார்: 8 ஆயிரம் சதுரஅடி பரப்பில் திமுக அலுவலகம்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகஅலுவலகமான அண்ணா அறிவாலயத் திறப்புவிழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப். 2-ம் தேதி டெல்லி செல்கிறார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க கடந்த 2006-ம் ஆண்டில் இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இதனடிப்படையில், எம்.பி.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுகவுக்கு 2013-ம் ஆண்டுடெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது.

அந்த நிலத்தில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்தஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ததுடன், விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முடிவுற்றன.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கட்டிடத்தை திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததால் புதிய கட்டிடம் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் 8 ஆயிரம் சதுரஅடிபரப்பில், 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில், அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் பார்வையாளர்கள் யார் வேண்டுமானாலும் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம் என்றும், கணினியில் டிஜிட்டல் வடிவிலும் புத்தகங்களைப் படிக்கலாம் என்றும் தெரிகிறது.

இதற்காக சென்னையில் இருந்து இரு லாரிகளில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகமுதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், 3-வது முறையாக டெல்லி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், உமர் அப்துல்லாவை அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version