முகம்மது ரஃபி பாடல்களை பாடும் திருச்சி சிவாவுக்கு பாஜகவின் இந்தி முழக்கம் வராதது எப்படி என அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது.
மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது ‘சப்கே சாத் சப்கா விகாஸ் (அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி)’ எனும் பாஜகவின் இந்தி முழக்கத்தை குறிப்பிட விரும்பினார். ஆனால் அந்த வார்த்தைகளை கூறுவதில் சற்று தடுமாறிய சிவா, பிறகு அதை முழுமையாக சொல்லாமலேயே அமர்ந்தார்.
இதை கூர்ந்து கவனித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மூத்த உறுப்பினர் திருச்சி சிவா, இந்திப் பாடல்களை மிகச்சிறப்பாக பாடுவார் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். (இதற்கு அவையில் ஆம், ஆம் என குரல்கள் எழுந்தன) ஆனால் அவர் தனது உரையில் சப்…கா சா…வி… எனத் தடுமாறியது வியப்பாக உள்ளது” என்றார்.
இதை சிரித்தபடியே கேட்ட திருச்சி சிவா மீண்டும் எழுந்து, “சார் நான் பாடல்கள் பாடுகிறேன். ஆனால், எனது நண்பர்கள் குறிப்பாக நண்பர் பகேல்ஜி இந்த அவையில் இல்லை. அவர்தான் என்னை ஆங்கிலத்தில் எழுதிவைத்து இந்தி பாடல்களை பாட வைத்தவர். நான் ஆங்கிலத்தில் பார்த்து பாடும் இந்தி பாடல் வரிகளின் அர்த்தம் என்ன என்று கேட்டால் எனக்கு தெரியாது. நான் பஹாரோன் பூல் பர்சாவோ (முகம்மது ரஃபியின் பாடல்) என நான் பாடியதற்கு அர்த்தம் தெரியாது” என்று கூறியதும் சிரிப்பொலி எழுந்தது.
இதையடுத்து அவையின் மாற்றுத் தலைவராக அமர்ந்திருந்த மூத்த எம்.பி. கன்ஷியாம் திவாரியும் முகம்மது ரஃபியின் மற்றொரு பாடலை குறிப்பிட்டு, “சவ் சால் பஹலே துமே முஜ்ஸே பியாரு தா.. எனும் பாடலை நீங்கள் பாடிக் கேட்டிருக்கிறேன்” என்றார்.
அவையில் சூடான விவாதங்களுக்கு இடையில் இந்த சில நிமிடங்கள் சுவாரஸ்யமாக அமைந்தது. இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.