புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியால் நாட்டின் ஒற்றுமை ஓங்கி வளர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.3,880 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக வாராணசி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நகரின் கல்வி, சுகாதார வசதிகள் அதிகரித்து உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வாராணசி மட்டுமன்றி ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பிராந்தியமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய கொள்கையுடன் மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் அயராது பாடுபட்டு வருகின்றன. லட்சாதிபதி சகோதரி திட்டத்தில் பூர்வாஞ்சல் பெண்கள் முழுமையாக பலன் அடைந்து வருகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் பகுதியின் பால் உற்பத்தி 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஒரு காலத்தில் பூர்வாஞ்சல் பகுதி மக்கள், உயர் சிகிச்சைக்காக டெல்லி, மும்பைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது நாட்டின் சுகாதார தலைநகராக வாராணசி உருவாகி உள்ளது. இங்கேயே அனைத்து உயர் சிகிச்சைகளையும் பெற முடிகிறது.
ஒரு காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடு, நிலங்களை விற்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெறுகின்றனர். இனிமேல் சிகிச்சைக்காக யாரும் நிலத்தை விற்க வேண்டிய அவசியமில்லை.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறை ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கினர். இதன்காரணமாக தற்போது 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், வாராணசியின் வளர்ச்சியை பார்த்து வியக்கின்றனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், விசாலமான சாலைகள், கங்கை நதியில் அழகான படித்துறைகள் என வாரணசி முழுமையாக மாறியிருக்கிறது. வாராணசி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளும் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன.
தேசிய அளவில் உத்தர பிரதேசத்தின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் புவிசார் குறியீடு பெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமையே பாரதத்தின் தாரக மந்திரம். இதை முன்னிறுத்தி வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாட்டின் ஒற்றுமை ஓங்கி வளர்கிறது.
ஒரு காலத்தில் குறிப்பிட்ட குடும்பத்தின் (சோனியா காந்தி) நலனுக்காக மட்டுமே ஆட்சி நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு சதிகள் அரங்கேற்றப்பட்டது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பிற்பகலில் மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அசோக் நகர் பகுதியில் உள்ள இசாகர் குருஜி மகாராஜ் கோயிலுக்கு அவர் சென்றார். அங்கு அவர் பூஜை, வழிபாடுகளை நடத்தினார்.
பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை: உத்தர பிரதேசத்தின் வாராணசி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த மார்ச் 29-ம் தேதி காணாமல் போனார். 7 நாட்களுக்கு பிறகு அவர் உடல் நலிவுற்ற நிலையில் வீடு திரும்பினார். இந்த ஒரு வார காலத்தில் மாணவிக்கு சிலர் போதை பொருட்களை கொடுத்துள்ளனர். அப்போது 23 பேர் அடுத்தடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வாராணசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்த முழுமையான விவரங்களை அளிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதன்படி வாராணசி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், வாராணசி காவல் ஆணையர் மோகித் அகர்வால் ஆகியோர் பிரதமர் மோடியிடம் விரிவான விளக்கம் அளித்தனர்.
ஆணையர் மோகித் அகர்வால் கூறும்போது “பிரதான எதிரி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது “தவறு செய்தவர்கள் தப்பி விடக்கூடாது, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆணையருக்கு உத்தரவிட்டார்.