மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை தாமதமாகி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து தந்தை, மகனை அடித்துக் கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை ஏன் தாமதமாகி வருகிறது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிபிஐ தரப்பில், “வழக்கை நாள் தோறும் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு நீதிபதி தான் விசாரணை நடத்தி வருகிறார். ஒரு மணி நேரம் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. சாட்சிகளிடம் எதிரிகள் 9 பேர் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்படுவதால் விசாரணை தாமதமாகி வருகிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அவரே குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
இதனால் விசாரணை மேலும் தாமதமாகிறது. இந்நிலையில் விசாரணையை 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர் சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.