வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவரின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது.
அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிப்பு அமலாகிறது. இதேபோல கனடா சார்ந்த செலவினங்கள் குறித்தும் ட்ரம்ப் தனது கருத்தை தெரிவித்தார். மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வேளாண் துறை, அதிலும் குறிப்பாக மீன் இறக்குமதி துறை, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியன பாதிக்கப்படும்.
தொழில் துறையில் மருந்துகள் துறை, நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் துறை பாதிக்கக்கூடும். ரசாயனத் துறை, மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் மெஷினரி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளின் மீது அமெரிக்காவும் இந்தியாவும் விதிக்கும் இறக்குமதி வரிகளுக்கு இடையிலான வித்தியாசமான அதிக கட்டண வேறுபாடு அல்லது இடைவெளி காரணமாக இந்தத் துறைகள் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து கூடுதல் சுங்க வரிகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
அதன்படி தானியங்கள், காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள், பால், நெய், வெண்ணெய், பால் பவுடன், சமையல் எண்ணெய், மதுவகைகள், ஒயின், ஸ்பிரிட் ஆகியனவற்றை இந்தியா ஏற்றுமதி செய்யும்போது இறக்குமதி வரி வித்தியாசங்களால் கூடுதல் சுங்க வரி சுமையும் சேரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.