பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் திமுக அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் பெண்களை, இந்துக்களின் நம்பிக்கைகளை இழிவு படுத்தும் வகையில் பேசியதும், அதன் காரணமாக திமுக பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் நாம் அறிவோம்.

ஆனால் இத்தகைய இழிவான கருத்தை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசுவது ஏற்புடையதே அல்ல. மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த காரணத்திற்காகவே அவரது அமைச்சர் பதவியை நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியின் பெண்கள் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பாக வருகின்ற 15-ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மையங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சைவ, வைணவ பெரியோர்களும், ஆன்மிகச் சான்றோர்களும், அனைத்து சமுதாயத் தலைவர்களும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழகத்தில் இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே இனி வருகின்ற காலத்திலே இதுபோல் அருவருக்கக்தக்க வகையில் யாரும் பேச மாட்டார்கள்.

எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பெரியவர்களும், தாய்மார்களும், சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *