15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 11 வயதான சோஹித் குமார் 720 புள்ளிகளுக்கு 710 புள்ளிகள் குவித்து தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
சோஹித் குமாரின் தந்தை மாற்று திறனாளி ஆவார். ஒரு காலை இழந்த அவர், ஊன்றுகோல்களைப் பயன்படுத்தி தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வருகிறார். 15 வருடங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் சோஹித்தின் தந்தை காலை இழந்தார்.
7-ம் வகுப்பு படித்து வரும் சோஹித் குமார், கடந்த ஆண்டு முதல் வில்வித்தை போட்டிகளில் பங்கேற்க தொடங்கி உள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற சோஹித்தால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. எனினும் தீவிர பயிற்சியின் காரணமாக கடந்த ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதே ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியிலும் சோஹித் தங்கப் பதக்கம் வென்றார்.
காம்பவுண்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வரும் சோஹித், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இலக்கு வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் வில்வித்தையில் காம்பவுண்ட் பிரிவு சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இளையோருக்கான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகி, சர்வதேச அளவில் இந்தியாவுக்காக களமிறங்குவதை நோக்கமாக கொண்டு தனது பயிற்சியை வேகப்படுத்தி உள்ளர் சோஹித் குமார்.