Site icon Metro People

சட்டம் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல: சூர்யா காட்டம்

ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 18-ம் தேதி ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள்.

இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்”

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 2) தான் ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும். ஆகையால் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version