Site icon Metro People

சுங்கச் சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் கட்டணம் செலுத்த தேவை இல்லை: புதிய விதிமுறைகள் விரைவில் அமல்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே செல்லலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறையஅனைத்து வாகனங்களுமே ஃபாஸ்ட் டேக்கை பொருத்தியுள்ளன. இதனால் சுங்கச் சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் நன்கு பலனடைந் துள்ளனர்.

இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப் படவுள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்படும். இக்கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம்.

10 விநாடிகள் தான்…

சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 விநாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

Exit mobile version