சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 93 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ளது. சில நகரங்களில் ரூ.100-ஐயும் தாண்டிவிட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்றைய (பிப். 27) நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் விலை உயர்ந்து, 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து, 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மாநில வரி உயர்வே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல எனவும், மத்திய அரசு வரியை உயர்த்தியதே காரணம் என்றும் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.