Site icon Metro People

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜனைத் தமிழக அரசு வைத்திருந்தது என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தபோது, “கரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

கரோனா 2-வது அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் மத்திய இணை அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தமைக்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரேனும் உயிரிழந்தார்களா என்பது குறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கரோனா 2-வது அலையின்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான, போதுமான ஆக்சிஜன் கிடைக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. ஆக்சிஜன் சப்ளையைக் கண்காணிப்பதற்காவும், அதில் சிக்கல்களைத் தீர்க்கவும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதேபோல தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை” என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version