தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகள் எவை என விரிவாக தெரிந்துகொள்வோம்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், தேனீர் கடைகளில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள உணவு கூடங்களிலும் அமர்ந்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியாக செயல்படுகிற காய்கறி, மளிகைக் கடைகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பயிற்சி சங்கங்கள், கேளிக்கை கூடங்கள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், தினமும் பூஜைகள் மட்டுமே நடத்துவதற்கு அனுமதிக்கப்படும்.
பக்தர்களின்றி குடமுழுக்கு நடத்தலாம் எனவும், புதிதாக குடமுழுக்கு நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும், இறுதி ஊர்வலம் போன்ற சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.