Site icon Metro People

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குப் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குப் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று (ஜூலை 06) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

இந்தக் குறைபாட்டினைக் களையும் பொருட்டுத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி, அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த 12.3.2021 முதல் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த, முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிஞ்சி என்.சிவகுமாரை தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து இன்று (நேற்று – ஜூலை 06) ஆணையிட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி என்.சிவகுமார் கட்டுமானப் பொறியாளர் ஆவார். இவர் ஏற்கெனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தின் அரிமா சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version