நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது அசாம் எம்.பி கௌரவ் கோகோய் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.
விவாதத்தைத் தொடங்கிய அசாம் எம்.பி. கெளரவ் கோகோய்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். அதன்படி நாடாளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர். முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கினார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதன்முதலில் கொண்டு வந்தது இவர்தான். இவரைத் தொடர்ந்தே பிற கட்சிகளும் தீர்மான நோட்டீஸ் அளித்தன. விவாதத்தைத் தொடங்க கெளரவ் கோகோய் எழுந்து நின்றபோது, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ராகுல் காந்திக்கு என்ன ஆனது, ஏன் ராகுல் பேசவில்லை? ராகுல் காந்தி சொல்வதைக் கேட்க நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்” எனக் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், பிரதமர் பெயரை குறிப்பிட்டுப் பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
3 முக்கியக் கேள்விகளை எழுப்பிய கௌரவ் கோகோய்
தொடர்ந்து பேசிய கௌரவ் கோகோய், ”இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கு நீதி வேண்டி கொண்டுவரப்பட்ட தீர்மானம். எதிர்க்கட்சிகள் மிகத் தெளிவாக மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி அவையில் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், அவர் தொடர்ந்து மவுனத்தைத் தேர்ந்தெடுத்தார். பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்” என்று பேசிய அவர், “மணிப்பூருக்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை? மணிப்பூர் விஷயம் குறித்துப் பேசுவதற்கு ஏன் 80 நாட்கள் வரை தேவைப்பட்டன. அதுவும் வெறும் 30 வினாடிகள் மட்டும் பேசியிருக்கிறார்? மணிப்பூர் கலவரத்தை அடுத்து அம்மாநில முதல்வரை ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யவில்லை” என 3 முக்கியக் கேள்விகளை எழுப்பினார்.
பரபரப்பை ஏற்படுத்திய கௌரவ் கோகோய் பேச்சு!
தொடர்ந்து பேசிய அவர், ”மணிப்பூர் மாநிலத்திற்கு நீதி வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது போல, எங்காவது அநீதி நிகழ்ந்தாலும் அது ஒட்டுமொத்த நீதிக்கும் பெரிய அச்சுறுத்தல்தான். மணிப்பூர் பற்றி எரிகிறது என அமைதியாக இருந்துவிட முடியுமா? மணிப்பூர் எரிகிறது என்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் எரிகிறது என்றுதான் அர்த்தம். மணிப்பூர் பிளவுபட்டு கிடக்கிறது என்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் பிளவுபட்டதாகத்தான் உணர வேண்டும்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது என்றால் அதற்கு மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம். பாஜக ஒரே இந்தியா பற்றிப் பேசுகிறது. ஆனால், அது இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளது. பாஜக தனது அதிகாரத்திற்காக நாட்டின் ஒருமைப்பாட்டை ஆபத்தில் தள்ளுகிறது. எனவே பிரதமர் மோடி இந்த அவைக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச வேண்டும்” என்றார்.
ராகுல் காந்தி பேசாததற்கு என்ன காரணம்?
முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கி வைத்துப் பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் இன்று பேசவில்லை. மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அவரின் தகுதி இழப்பை மக்களவைச் செயலகம் ரத்து செய்தது.
இதையடுத்து அவர் மீண்டும் எம்.பியாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து ராகுல் பேசாததற்குக் காரணம், மணிப்பூரைப் போலவே அசாம் மாநிலமும் இந்தியாவின் வடகிழக்கில் உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் கௌரவ் கோகோய். இதனால் ராகுலுக்குப் பதிலாக கெளரவ் கோகோயை காங்கிரஸ் முன்னிறுத்தியிருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
யார் இந்த கெளரவ் கோகோய்?
அசாம் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான தருண் கோகோயின் (2001 – 2016 வரை முதல்வராக இருந்தவர்) மகன்தான் இந்த கெளரவ் கோகோய். இவர், தற்போது அசாம் மாநிலம் கலியாபோர் தொகுதி எம்.பியாக இருக்கிறார். 2014இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கலியாபோர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதையடுத்து 2019 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.