திரைப்படத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி திரைப்படங்களிலும் நடித்து தேசம் முழுவதும் பரவலான ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவருமான நடிகர் மாதவன் இன்று (ஜூன் 1) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜம்ஷெட்பூரில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாதவன். வீட்டில் தமிழ், வெளியில் இந்தி என இரண்டு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்துடன் வளர்ந்தவர். இரு மொழிகளும் சரளமாகப் பேசக் கற்றவர். ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழில் வெற்றிகரமான நாயக நடிகராக உயர்ந்து இந்தியிலும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
தமிழில் ‘அலைபாயுதே’, ‘மின்னலே’ போன்ற காதல் படங்கள் வெற்றி பெற்றன. இவற்றின் மூலம் இளம் பெண்களின் மனதைக் கவர்ந்த நடிகரானார். ஆனால், அந்த இமேஜுக்குள் சுருங்கிவிடாமல் ‘ரன்’ திரைப்படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். மணிரத்னம் இயக்கிய தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை முன்வைத்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்தார். ‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனுடன் இரண்டாம் நாயகனாக நடித்தார்.
மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் வில்லனாக நடித்தார். சீமான் இயக்கிய ‘தம்பி’ படத்தில் மக்களுக்கான போராளியாக நடித்தார். இந்தப் படங்களின் வெற்றி தோல்வியைத் தாண்டி சிறந்த நடிப்புக்காகவும் எத்தகைய கதாபாத்திரத்திலும் பொருத்திக்கொள்ளும் தன்மைக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார் மாதவன்.
இந்தியிலும் ‘ரங்தே பசந்தி’, ‘3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் துணை நாயகனாக நடித்துப் புகழ்பெற்றார். அவர் முதன்மை நாயகனாக நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உயர்ந்தார் மாதவன்.
சினிமாவில் நடிப்பதிலிருந்து சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். அதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் வந்தபோது முன்பைவிட இளமையாகவும் கச்சிதமான உடலமைப்புடனும் தோன்றினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்த இருமொழிப் படம் தமிழில் ‘இறுதிச் சுற்று’, இந்தியில் ‘சாலா கதூஸ்’ என்னும் தலைப்புகளில் வெளியாகி இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டையும் பெற்றது. தொடக்கம் முதலே பல வகையான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அழகான இளைஞனாகவே அதிக ரசிகர்களைக் கவர்ந்திருந்த மாதவன் இந்தப் படத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். முழுமையாக உருமாற்றம் அடைந்த பிறகு நிகழ்ந்த பிரம்மாண்டமான மறுவருகையாக அந்தப் படம் அமைந்தது.
வெற்றிக் களிப்பில் அவசரப்படாமல் நிதானமாகப் படங்களைத் தேர்ந்தெடுக்கிறார். முன்பைப் போலவே இமேஜ் பார்க்காமல் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். அதே நேரம் தனது வயதுக்கேற்ற கண்ணியத்துக்குக் களங்கம் நேராத திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறார்.
புஷ்கர்-காயத்ரி இயக்க்கிய ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் கடமை உணர்ச்சி மிக்க காவல்துறை அதிகாரியாக அதேநேரம் இன்னொரு நாயகனான விஜய் சேதுபதியின் மூலம் தன்னுடைய தவறான கண்ணோட்டங்களையும் கொள்கைப் பிழைகளையும் திருத்திக்கொள்பவராக வெகு சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் மாதவனின் நடிப்பும் தோற்றப் பொருத்தமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதற்கு மாதவனின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
‘ப்ரீத்’ (Breathe) என்னும் இணையத் தொடர், ‘நிசப்தம்’, ‘மாறா’ உள்ளிட்ட திரைப்படங்கள், தற்போது தயாரிப்பில் இருக்கும் மேலும் சில இணையத் தொடர்கள் என ஓடிடி உலகிலும் வெற்றிகரமாக இயங்கிவருகிறார். போலியான குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை முன்வைத்து ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்னும் திரைப்படத்தை தமிழ், ஆங்கிலம் இந்தி ஆகிய மும்மொழிகளில் எழுதி, இயக்கி, தயாரித்து தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.
திரை எழுத்தில் மாதவனுக்கு எப்போதும் ஆர்வம் இருந்துவந்துள்ளது. தான் தமிழில் நடித்த ‘நள தமயந்தி’ படத்தின் இந்தி மறு ஆக்கமான ‘ராம்ஜே லண்டன்வாலே’ திரைப்படத்துக்கு திரைக்கதைப் பங்களிப்பாற்றினார். ‘நிஷிகாந்த் கமத் இயக்கிய புகழ்பெற்ற மராத்தி திரைப்படமான ‘டோமிவாலி ஃபாஸ்ட்’ மாதவனின் முயற்சியால் தமிழுக்கு வந்தது. அதன் தமிழ் மறு ஆக்கமான ‘எவனோ ஒருவன்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்ததோடு இணைத் தயாரிப்பாளராகச் செயல்பட்டார். வசனமும் எழுதினார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே பொது நிகழ்ச்சிகளில் உரையாடும் கலைப் பயிற்றுநராக இயங்கிவந்தவர் மாதவன். தகவல்தொடர்பு திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளையும் உரைகளையும் அவ்வப்போது நிகழ்த்திவருகிறார். பல்வேறு தேசிய சர்வதேச நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இப்படி திரையிலும் தனி வாழ்விலும் அசலான பன்முகத் திறமையாளராகச் செயல்பட்டுவரும் மாதவன் இரண்டிலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கவும் அவருடைய புகழ் பன்மடங்கு அதிகரிக்கவும் மனதார வாழ்த்துவோம்.