Site icon Metro People

மே மாதத்துக்கான மின் பயன்பாட்டை மக்களே சுய கணக்கீடு செய்து மின்கட்டணம் செலுத்தலாம்

மே மாதத்துக்கான மின்சார கட்டணத்தை பொதுமக்களே சுய கணக்கீடு செய்து, மின்வாரியத்திடம் தெரிவித்து ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, முந்தைய மாத மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்றுமின்வாரியம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களே சுய கணக்கீடு செய்து, அதன்படி கட்டணம் செலுத்தும் வசதியை இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மீட்டரை புகைப்படம் எடுத்து..

இதன்படி, பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள கணக்கை புகைப்படம் எடுத்து, வாட்ஸ்அப், கடிதம் அல்லது இ-மெயில் வாயிலாக மின்வாரிய உதவி பொறியாளரின் கைபேசி, இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர்களின் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தில் உள்ளன.

இவ்வாறு பொதுமக்கள் சுயமாக கணக்கிட்டு அனுப்பப்படும் விவரங்களை மின்வாரிய அதிகாரிகள் பத்திரமாக பாதுகாப்பார்கள். அதன்பிறகு, மின் கணக்கீட்டுக்கான கட்டண விவரத்தை சம்பந்தப்பட்ட மின்நுகர்வோருக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது இ-மெயில் மூலமாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி அனுப்புவார்.

ஆன்லைனில் செலுத்தலாம்

அதன்பின், பொதுமக்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக அதாவது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமென்ட் கேட்வே, பாரத்பில் பே மூலமாக செலுத்தலாம்.

அதே நேரம், மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கெனவே கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை மின்வாரிய உதவி பொறியாளர்கள் நீக்கிவிடுவார்கள்.

பொதுமக்களின் சுய கணக்கீட்டு விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, தேவை ஏற்பட்டாலோ கரோனா விதிமுறைகளை கடைபிடித்து மின்வாரிய அலுவலர்கள் கணக்கீடு செய்வார்கள்.

இத்தகவல்களை சுற்றறிக்கையாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கணக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version