‘மெய்யழகன்’ படம் ஒரு காவியம் என்று நானி புகழாரம் சூட்டியிருக்கிறார். மே 1-ம் தேதி நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ படம் வெளியாகவுள்ளது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வருகிறார் நானி. இதில் அளித்த பேட்டியில் ‘மெய்யழகன்’ படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘மெய்யழகன்’ குறித்து நானி, “தமிழ் சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகிலேயே சிறந்த படமொன்றால் ‘மெய்யழகன்’ தான். அப்படம் ஒரு சிறந்த காவியம். அது ஒரு மேஜிக். பெரிய அரங்குகள் அமைத்து, 1000 கோடி ரூபாய் வரை செலவு என என்ன செய்தாலுமே ‘மெய்யழகன்’ மாதிரி ஒரு படம் பண்ண முடியாது. அந்தப் படம் ஒரு சிறந்த மேஜிக். ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயத்தை தொட்டு படமாக செய்திருப்பதாக நினைக்கிறேன்.
கார்த்தி, அரவிந்த் சுவாமி, இயக்குநர் பிரேம் குமார் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து ஒரு டைம்லெஸ் கிளாசிக் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு கார்த்தி சாரிடம் நீண்ட நேரம் பேசினேன். அரவிந்த் சுவாமி சாரிடம் என் வாழ்த்தை கூறுமாறு தெரிவித்தேன். ‘மெய்யழகன்’ படம் பற்றி எப்போது நினைத்தாலும், சந்தோஷமாகி விடுவேன்” என்று தெரிவித்துள்ளார் நானி.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது.