சென்னை: சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் ரூ.1.32 கோடியில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, 280 இருக்கைகள், லைவ் கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொது நூலகத்துறை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், பொது நூலகத் துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அதே அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வான முதுநிலை ஆசிரியர்கள் 34 பேர், சுருக்கெழுத்து தட்டச்சர், நூலகர், தகவல் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி-யால் தேர்வான 21 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் உதவித் தொகையையும் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ‘‘பள்ளிக்கல்வித் துறைக்கும், நூலகத் துறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. மற்ற துறைகள் அனைத்தும் பொருளை ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன. நூலகத் துறை மட்டுமே நிதியை முதலீடு செய்யும் துறையாக உள்ளது. இந்த முதலீடுகளுக்கு எல்லாம் சிறந்த வட்டியாக மிகப்பெரிய உயர்ந்த சமுதாயத்தை நாம் உருவாக்கி திருப்பி தருகிறோம்.
கடலூர், திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக நூலகங்களை அறிவித்துள்ளோம். திருச்சி, கோவையில் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
முன்னதாக காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரணர் இயக்குநரகத்தின் தலைமையகத்தில் 100 ஆண்டுகளை நெருங்கும் பழமையான ஜாம்போரி அரங்கக் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார். பாரத சாரணர் இயக்குநரகத்தின் ஆணையர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.