கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றில் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பல்வேறு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன்அங்கீகரித்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய பிரிட்டன் அரசு தடை விதித்து வருகிறது.
இதனால் இந்தியப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பிரிட்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வில்லை. இதனிடையே, பிரிட்டன் அரசு சில நாட்களுக்கு முன்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வரும் 4-ம் தேதிமுதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பிரிட்டனுக்கு வர முடியும் என்றும், பிறநாடுகளில் இருந்து வருபவர்கள் (தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும்) 10 நாள் தனிமையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் 4-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள், எந்த கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் 10 நாள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா அங்கீகாரம்
சர்வதேச பயணிகளை அனுமதிக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் கோவிஷீல்ட், சீனாவின் கரோனாவேக் தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாகஆஸ்திரேலியாவில் சர்வதேசபயணிகளை அனுமதிக்க நெறிமுறைகள் திட்டமிடப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று தெரிவித்தார்.