சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றிய திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான பொய்களின் பட்டியலை தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டது. அப்பட்டியலின் முக்கிய பொய்களில் ஒன்று தான் நீட் தேர்வு ரத்து அறிவிப்பு. இயலாமையை மறைப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம், அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் திமுக தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்.
இப்போது, அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதல்வர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள், இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது சமரசமற்ற நிலைப்பாடு. மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படுவதே நிரந்தர தீர்வு.
வெற்று விளம்பர மாடல் திமுக அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடக கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது. மக்கள் விழித்துக் கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது. இதுவரை எம் மாணவ செல்வங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றியதற்காக திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப்போகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்