சென்னை: மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள், என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிமுகம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற திராவிட மாடல் அரசு, இன்றைக்கு நாம் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக, அதாவது ரெண்டு மடங்கு உயர்த்தி இருக்கோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிற மாநிலம் தமிழ்நாடுதான். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தை, அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலகச் சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிட்டிருக்கிறோம்.
அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்து 493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீனக் கருவிகள் வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் மெரினா மற்றும் பெசன்ட் நகர்க் கடற்கரைகளில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்க சிறப்பு மரப்பாதையை உருவாக்கி இருக்கிறோம். இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல, மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி 27-ம் நாள் கொளத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் இதை நான் அறிவித்தேன். 12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் வாழும் ஊரிலேயே மரியாதை கிடைக்கும்.
உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இப்போது அந்தச் சட்டமுன்வடிவுகளை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.
இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமோர் முன்னெடுப்பு.இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள்மூலம் இந்த அவைக்கு வழங்குகிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும், அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மாற்றுவதும்தான் திராவிட இயக்கத்தினுடைய நோக்கம். அந்த அடிப்படையைக் கொண்டதுதான் இந்தச் சட்டம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு சட்டமுன்வடிவுகளை இங்கே அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
இந்தச் சட்டத் திருத்தத்தினால் விளையப் போகும் பலன் பற்றி ஒரு விவரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்.
அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும். இது இந்தச் சட்டத்தினால் விளையப்போகும் மிகப் பெரிய நன்மை என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.