காரைக்கால் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 4 நாட்களுக்குள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, மாவட்ட நலவழித்துறை மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜன.3) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 16,000 சிறுவர்களுக்கு 4 நாட்களுக்குள் முதல் தவணை கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். பின்னர் அரசு வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசியும் 4 நாட்களில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு வரும் சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.