Site icon Metro People

தஞ்சாவூரில் கொரோனா பாதித்த 18 வயது இளம்பெண் மரணம்.. 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 14,212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 257 ஆண்கள், 219 பெண்கள் என 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 221 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், கோவையில் 26 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று, 24 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இவர்களுள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 22 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 69 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 1,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோவையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரேனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 34,18,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 38,026 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version