புதுப்பொலிவு பெறும் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள்: நவீனமயமாகும் மின்கட்டண வசூல் மையங்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா 10 மின்வாரிய பிரிவு அலுவலகங்களை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மின்வாரியத்துக்கு 2,850 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் மின்கட்டண வசூல் மையங்களும், துணை மின்நிலையங்களும் உள்ளன. மின்விநியோக பணிகள் பிரிவு அலுவலகங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சேதம் அடைந்த மின்விநியோகப் பெட்டிகள், கேபிள்கள் உள்ளிட்ட மின்சாதனங்களும், வீடுகளில் இருந்து கழற்றப்படும் குறைபாடு உடைய மீட்டர்கள் உள்ளிட்டவையும் பிரிவு அலுவலகங்களில் குப்பைகள் போன்று குவித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் பல அலுவலகங்கள், மின்கட்டண மையங்கள் தூசி படர்ந்து கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் மின்வாரிய பிரிவு அலுவலகங்களை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள பழைய மின்சாதனங்களை அகற்றி, சேதம் அடைந்த பகுதிகளை சீரமைத்து, மின்கட்டண மையம், பிரிவு அலுவலகம், துணைமின் நிலையத்தை புதுப் பொலிவுக்கு மாற்றுமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 அலுவலகங்களை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கொட்டிவாக்கம் துணைமின் நிலையத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு, பொறியாளர்களுக்கு, மின்வாரிய தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *