மேற்கு வங்க வன்முறை: பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு

கொல்கத்தா: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மற்றும் மால்டா பகுதிகளை பார்வையிட தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு அங்கு சென்றுள்ளது.

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து முர்ஷிதாபாத்தில் ஏப்.11ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பெரிய அளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் ஜார்க்கண்ட்டின் பாகுர் மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பிறர் மால்டாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வியாழக்கிழமை கொல்கத்தா உயர் நீதிமன்றம், சட்ட ஒழுங்கை தொடர்ந்து பாதுகாத்திட மத்திய படைகள் முர்ஷிதாபாத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்திருந்தது.

மேலும், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதற்றத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டாவைப் பார்வையிடுகிறார். முன்னதாக வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளுடன் ராஜ்பவனும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ஆளுநர், “நான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிய உள்ளேன்.தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் முர்ஷிதாபாத்துக்கும் கண்டிப்பாக செல்வேன்.அங்கிருந்து வந்த மக்கள், அங்கு நிரந்தரமாக பிஎஸ்எஃப் முகாம் அமைக்கப்பட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *