பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகள் இனி வரக் கூடாது. அதற்கேற்ற வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு விபத்துகளில் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவச் செல்வங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கூட, அது பயனளிக்காததும், மாணவச் செல்வங்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணித்து உயிரிழப்பதும் கவலையளிக்கிறது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று கேளம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்து கொண்டிருந்த மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ஆவது வகுப்பு மாணவர் யுவராஜ், கண்டிகை என்ற இடத்தில் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். அதே பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார். அதேபோல், கடந்த 26-ஆம் நாள் தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் சென்று மாநகரப் பேருந்தில் முன்பக்க படிகளில் தொங்கியவாறு பயணம் செய்த கேளம்பாக்கம் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் சஞ்சய், படியிலிருந்து தவறி விழுந்து, பின்பக்க சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துகளும் ஒரே வழித்தடத்தில், ஒரே மாதிரியாக நிகழ்ந்திருக்கின்றன. படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பது இப்போது தான் புதிதாக நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால், இத்தகைய விபத்துகளை தவிர்க்க அரசுத் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; மாணவர்களும் விழிப்புணர்வு பெற்று பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்ப்பதில்லை
இத்தகைய விபத்துகளுக்கு மாணவர்களையோ, பேருந்துகளின் ஓட்டுநர்களையோ மட்டும் குறை கூற முடியாது. அரசு தான் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை பொறுப்பேற்க வேண்டும். பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பது பெரும் தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அத்தவறை மாணவர்கள் செய்வதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் காரணமாக உள்ளன என்ற குற்றச்சாட்டையும் புறக்கணித்து விட முடியாது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதற்கான முதன்மைக் காரணம் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாதது தான்.
மாநகரப் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்களும், மற்றவர்களும் பயணிப்பதை தவிர்ப்பதற்காகத் தான் படிக்கட்டுகளில் கதவுகள் பொறுத்தப்பட்டன. பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவோ, அதை விட 10 முதல் 20% வரை கூடுதலாகவோ பயணிகள் பயணிக்கும் போது மட்டும் தான் படிக்கட்டுகளின் கதவுகளை மூட முடியும். ஆனால், அதையும் தாண்டி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் பயணிக்கும் போது கதவுகளை முட முடியாது. அத்தகைய சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள், வேறுவழியின்றி படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிப்பதை தவிர்க்க முடியாது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்திலும், பணி நேரம் முடிவடையும் நேரத்திலும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதன் மூலம் தான் மாணவர்கள் படிகளில் தொங்குவதையும், இத்தகைய விபத்துகளையும் தவிர்க்க முடியும். கடந்த 26-ஆம் தேதி நடந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், குறைந்தபட்ச அந்த வழித்தடத்திலாவது அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கி, படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்காதவாறு காவல்துறையினர் ஒழுங்கு படுத்தியிருந்தால் இன்று நடந்த விபத்தையும், உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம். அதை செய்யத் தவறிய மாநகரப் போக்குவரத்துக் கழகமும், காவல்துறையும் தான் இன்றைய உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அதே நேரத்தில் மாணவர்களும் பொறுப்புடனும், கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். எந்த சமூகப் பொறுப்பும் இல்லாமல் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும், பேருந்துகளின் கூரைகள் மீதேறி நடனமாடிக் கொண்டே பயணிப்பதும் வழக்கமாகி விட்டன. இன்னும் சில மாணவர்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கும் போது நீண்ட அரிவாள்களை பிளாட்பாரத்தில் தேய்த்து தீப்பொறி பறக்கச் செய்வதைப் பார்க்கும் போது நமது இளைய தலைமுறை எதை நோக்கி பயணிக்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வயதில் சாகசங்களை செய்யும் மனநிலை இயல்பானது தான். ஆனால், தங்களின் பிள்ளைகள் படித்து, நல்ல வேலைக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் தான் பல பெற்றோர்கள் தங்களை வருத்திக் கொண்டு பள்ளி -கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர்; இன்றைய மாணவர்களைத் தான் தனது எதிர்காலமாக இந்தியா கருதுகிறது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அதற்கேற்ற பக்குவத்துடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கிடைக்கும் சாகச உணர்வுக்காக விலைமதிப்பற்ற உயிரை இழந்து விடக் கூடாது.
பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகள் இனி வரக் கூடாது. அதற்கேற்ற வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் எதிர்காலம் – குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.