சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. இதில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பான செயல்பாடுகளுக்கு, ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து, இங்குள்ள 80654 20020 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்; விளக்கம் பெறலாம். இந்த வார் ரூமிற்கு, நேற்று முன்தினம் ஒரே நாளில் 627 புகார்கள் வந்துள்ளன. அப்போது, பொதுமக்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இது போன்று, பல தரப்பிலும் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த விளக்கம்:
கடந்த 2002ல் ஓட்டளித்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாறி குடியேறியிருந்தால், ஓட்டுரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?
வாக்காளர் இன்றைக்கு எந்த முகவரியில் இருக்கிறாரோ, அந்த இடத்திற்கு தான் கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கப்படும். 2002ம் ஆண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்ற தகவல் மட்டுமே, அப்போது சரிபார்க்கப்படும்.
மனைவியின் ஓட்டுரிமை, அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரிக்கு ஆதாரமாக, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை என இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவற்றை ஏற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியுமா?
கணக்கெடுப்பின் போது, இதுபோன்ற எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.
படிவத்தில் உறவினர் குறித்த தகவலை கட்டாயம் நிரப்ப வேண்டுமா?
தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரை பதிவு செய்தால் மட்டும் போதும்.
கடந்த 2024ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது. தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஓட்டுச்சாவடி அலுவலரிடம், படிவம் – 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாது. அதன்பின், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, இறுதி பட்டியலில் சேரலாம்.

Leave a Reply